சேவை வழங்குநர் அல்லது தொழிலாளியைத் தேர்ந்தெடுப்பது எப்படி
வேறு மொழிகளில்: Français English
வீட்டுத் திருத்த வேலைகள், வீடு மாற்றம், துப்புரவு, பழுதுபார்ப்பு, வீட்டுக்கு வந்து அலங்காரம், தனியார் வகுப்புகள், கணினி உதவி — இவற்றுக்கு விளம்பரம் மூலமோ தெரிந்தவர்கள் சொல்லியோ ஒருவரை அழைக்கிறோம். பெரும்பாலானோர் நேர்மையானவர்கள்தான். ஆனால் சில எளிய சரிபார்ப்புகள் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்த்து, தெளிவான உறவுடன் வேலையைத் தொடங்க உதவும்.
1. உங்களுக்கு என்ன தேவை என்பதைத் தெளிவாக்குங்கள்
யாரையும் தொடர்புகொள்ளும் முன், வேலையின் தன்மை, அளவுகள், எப்போது முடிய வேண்டும், ஏறக்குறைய எவ்வளவு செலவழிக்கலாம் என்பதை எழுதுங்கள். படங்கள் அனுப்பினால் தொழிலாளிக்கு வேலையைப் புரிந்துகொள்ள இலகுவாக இருக்கும். கோரிக்கை தெளிவாக இருந்தால், கிடைக்கும் மதிப்பீடுகளை ஒப்பிடவும் சுலபம்.
என்ன செய்ய வேண்டும் என்று சரியாகத் தெரியாவிட்டால் — உதாரணமாக நீர்க் கசிவு அல்லது மின் பழுது — அதை வெளிப்படையாகச் சொல்லி, முதலில் பிரச்சினையைக் கண்டறியும்படி கேளுங்கள். பிரச்சினை எப்போது வருகிறது, நீங்கள் ஏற்கனவே என்ன முயன்றீர்கள் என்று தெளிவாகச் சொன்னால், அவர் தயாராகி வரவும் தேவையான நேரத்தைக் கணிக்கவும் உதவும்.
2. யாருடன் வேலை செய்யப் போகிறீர்கள் என்று சரிபாருங்கள்
- SIRET இலக்கம்: பதிவுசெய்த தொழில் நிறுவனத்துக்கு அடையாள இலக்கம் உண்டு. அதிகாரபூர்வ நிறுவனப் பட்டியலில் (annuaire-entreprises.data.gouv.fr) இலவசமாகச் சரிபார்க்கலாம்: பெயர், முகவரி, பதிவுசெய்த தொழில், தொடங்கிய திகதி.
- தொழில் பொருத்தம்: பதிவுசெய்த தொழில் நீங்கள் கேட்கும் வேலையுடன் பொருந்த வேண்டும்.
- காப்புறுதி: கட்டட வேலைகளுக்கு பத்தாண்டுப் பொறுப்புக் காப்புறுதி (garantie décennale) கட்டாயம் — அதன் சான்றிதழைக் கேளுங்கள்.
- தகைமைகள்: சக்தி சேமிப்புத் திருத்த வேலைகளுக்கான அரசாங்க உதவிகளுக்கு, அங்கீகரிக்கப்பட்ட RGE முத்திரை உள்ள தொழில்முறையாளர் தேவை.
- பரிந்துரைகள்: முன்பு செய்த வேலைகளின் படங்கள் அல்லது முன்னைய வாடிக்கையாளர்களின் தொடர்பு கேளுங்கள்.
3. எழுத்துமூல மதிப்பீடு (devis) கேளுங்கள்
விரிவான devis இரு தரப்பினரையும் பாதுகாக்கும்; பல வகையான வேலைகளுக்கு, வேலை தொடங்கும் முன் அது கட்டாயமும் கூட. நல்ல devis இல் இருக்க வேண்டியவை:
- நிறுவனத்தின் முழு விவரம்;
- செய்யப்படும் வேலைகளும் பயன்படுத்தப்படும் பொருட்களும்;
- ஒவ்வொன்றின் விலையும், வரிக்கு முன்னும் பின்னுமான மொத்தமும்;
- வேலை நடக்கும் காலம், devis செல்லுபடியாகும் காலம்;
- பணம் செலுத்தும் நிபந்தனைகள்.
முடிந்தால் இரண்டு அல்லது மூன்று devis பெற்று ஒப்பிடுங்கள். விலையை மட்டும் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டாம்: மிகக் குறைந்த விலை என்றால் அரைகுறை வேலையோ பின்னர் வரும் மேலதிகக் கட்டணங்களோ இருக்கலாம். Devis இல் கையெழுத்திடுவது அதை ஏற்பதாகும் — முதலில் வாசியுங்கள்.
4. பணம் செலுத்துவதை ஒழுங்குபடுத்துங்கள்
பொருட்கள் வாங்க வேண்டியிருந்தால், ஆரம்பத்தில் ஒரு பகுதிப் பணம் (acompte) கொடுப்பது வழக்கம். ஆனால் வேலை தொடங்கும் முன் முழுத் தொகையையும் கொடுப்பது ஆபத்து. வேலை முன்னேறுவதைப் பொறுத்துப் பகுதி பகுதியாகவும், பதிவு இருக்கும் முறைகளிலும் (வங்கிப் பரிமாற்றம், காசோலை, அட்டை) செலுத்துங்கள்; இறுதியில் பற்றுச்சீட்டு (facture) கட்டாயம் கேளுங்கள். பற்றுச்சீட்டு தர மறுப்பவர்களிடமும், காசு மட்டுமே கேட்பவர்களிடமும் கவனம்.
துப்புரவு, பிள்ளைப் பராமரிப்பு, பாட உதவி, சிறிய தோட்ட வேலைகள் போன்ற சில வீட்டுச் சேவைகளுக்கு, பதிவுசெய்த நிறுவனம் அல்லது பதிவுசெய்த ஊழியர் மூலம் பெற்றால் வரிச் சலுகை கிடைக்கலாம். விவரங்கள் service-public.fr தளத்தில்.
5. வேலை நடக்கும்போதும் முடிந்த பின்பும்
தொடர்பில் இருங்கள், வேலையின் முன்னேற்றத்தைக் கவனியுங்கள். இடையில் கேட்கும் எந்த மாற்றத்தையும் அதன் செலவுடன் எழுத்தில் பதிவுசெய்யுங்கள். இறுதியில், மீதிப் பணத்தைக் கொடுக்கும் முன் வேலையைச் சரிபாருங்கள்.
6. பொதுவாக நடக்கும் மோசடிகள்
- போலி அவசர சேவை: அவசரத்தில் அழைக்கும் பூட்டுத் திருத்துநர் அல்லது குழாய்த் திருத்துநர் குறைந்த விலை சொல்லிவிட்டு, பின்னர் பெருந்தொகை கேட்பது. நம்பகமான ஒருவரின் இலக்கத்தை முன்கூட்டியே வைத்திருங்கள்; வேலை தொடங்கும் முன் devis கேளுங்கள்.
- வீட்டுக்கு வந்து அழுத்தம் கொடுக்கும் விற்பனை: வீட்டில் வைத்துக் கையெழுத்திடும் ஒப்பந்தங்களுக்குப் பொதுவாக மனம் மாற்றும் காலம் (délai de rétractation) உண்டு. அழுத்தத்துக்கு இணங்க வேண்டாம்; அதே நாளில் பணம் கொடுக்க வேண்டாம்.
- முற்பணத்துடன் மறைபவர்: பெரிய முற்பணம் வாங்கிய பின் தொடர்புகொள்ள முடியாமல் போவது. பணம் கொடுக்கும் முன் நிறுவனத்தைச் சரிபாருங்கள்; முற்பணத்தை நியாயமான அளவில் வையுங்கள்.
மேலும் வாசிக்க: விளம்பர மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி.
7. நீங்கள் சேவை வழங்குபவரா?
தெளிவான விளம்பரம் நம்பிக்கையை உருவாக்கும்: உங்கள் தொழில், நீங்கள் வேலை செய்யும் பகுதிகள், நேரம், முன்பு செய்த வேலைகளின் படங்கள், தொடர்புகொள்ளும் முறை. நீங்கள் பதிவுசெய்தவரா, devis உம் பற்றுச்சீட்டும் தருவீர்களா என்று குறிப்பிடுங்கள் — வாடிக்கையாளர்களுக்கு அது முக்கியம். மேலும்: நல்ல விளம்பரம் எழுதுவது எப்படி.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Devis எப்போதும் இலவசமா?
பெரும்பாலும் இலவசம், ஆனால் எப்போதும் இல்லை. பயணமோ விரிவான ஆய்வோ தேவைப்பட்டால், முன்கூட்டியே உங்களுக்குச் சொல்லும் நிபந்தனையுடன், அதற்குக் கட்டணம் அறவிடலாம். முதல் தொடர்பிலேயே இதைக் கேளுங்கள்.
வேலை சரியாகச் செய்யப்படாவிட்டால்?
முதலில் பிரச்சினைகளைப் படங்களுடன் விளக்கி, எழுத்துமூலம் தொழில்முறையாளருக்கு அறிவியுங்கள்; திருத்த நியாயமான காலம் கொடுங்கள். கருத்து வேறுபாடு தொடர்ந்தால், நுகர்வோர் மத்தியஸ்தரை (médiateur de la consommation) இலவசமாக அணுக அவர் வழி செய்ய வேண்டும்.
தொழில்முறையாளருக்குக் காசாகக் கொடுக்கலாமா?
தொழில்முறையாளருக்குக் காசாகச் செலுத்தக்கூடிய தொகைக்குச் சட்ட வரம்பு உண்டு; அதற்கு மேல் பதிவு இருக்கும் முறையைப் பயன்படுத்த வேண்டும். எப்படியாயினும் பற்றுச்சீட்டு கேளுங்கள் — பிரச்சினை வந்தால் அதுவே உங்கள் சான்று.
சுருக்கமாக
தெளிவான தேவை, சரிபார்த்த தொழில்முறையாளர், எழுத்துமூல devis, படிப்படியான கொடுப்பனவு, பற்றுச்சீட்டு — இந்த ஐந்து பழக்கங்களும் பெரும்பாலான பிரச்சினைகளைத் தவிர்க்கும்.
TamilMarket இன் சேவைகள் பிரிவில் சேவை வழங்குநர்களைத் தேடுங்கள், அல்லது உங்கள் சேவைகளை அறிவிக்க விளம்பரம் இடுங்கள்.